திருக்குறளின் வழியாக பகவத் கீதையின் ஞானம்


பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த பகவத் கீதையின் உண்மைகளை தெய்வப் புலவர் திருக்குறளில் கூறியிருப்பது திருக்குறளின் பல பெருமைகளுள் தலையாய பெருமையாகும்.
வாழும் வழிமுறை, அறநெறி ஒழுக்கத்தின் உயர்வு, தன்னுணர்வு, இறையுணர்வு ஆகியவற்றை விளக்கும் திருக்குறளின் பார்வையிலிருந்து, இறைத் தொண்டையும் பக்தியையும் விளக்கியுரைக்கும் ஓர் எளிய முயற்சி

                          பரமாத்மா


நம்முடன் சேர்ந்து, நமது இதயத்தில் இறைவன் பரமாத்மாவாக இருக்கிறார் என்பதை பகவத் கீதையின் பதிமூன்று, பதினைந்தாவது அத்தியாயங்கள் உறுதி செய்கின்றன.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்
(திருக்குறள் 3)

“இதயமாகிய தாமரை மலரில் இருப்பவனின் மாட்சிமை பொருந்திய அடிகளைச் சேர்ந்தவர் எல்லா உலகிற்கும் மேலாய வீட்டுலகின்கண் அழிவின்றி வாழ்வார்.”
எல்லா உலகங்களுக்கும் அவற்றிலுள்ள உயிர்களுக்கும் காரணமாகத் திகழும் முழுமுதற் கடவுளாகிய ஆதிபகவன் இதயத்திலிருக்கிறான் என்பதை வள்ளுவர் மூன்றாவது குறளில் உறுதி செய்கின்றார். அந்தர்யாமியாக இருக்கும் இறைவனை “பரமாத்மா” என்று வேத இலக்கியங்கள் கூறுகின்றன. இங்கே “வீடு” என்பது நிலையான அழிவற்ற உலகமாகிய கோலோக விருந்தாவனத்தை குறிக்கிறது.

பகவத் கீதை (13.23) கூறுகிறது:
உபத்ரஷ்டானு மந்தா சபர்தா போக்தா மஹேஷ்வர:
பரமாத்மேதி சாப்யுக்தோதேஹே ’ஸ்மின் புருஷ: பர:

“இந்த உடலில் மற்றொருவரும் இருக்கின்றார், அவர் தெய்வீக அனுபவிப்பாளர். அவரே இறைவன், பரம உரிமையாளர். மேற்பார்வையிட்டு அனுமதி வழங்கு பவரும், பரமாத்மா என்று அறியப்படுபவரும் அவரே.”

ஜடத்தளையில் இருக்கும் ஜீவாத்மா, இவ்வுலக நம்பிக்கைகள், இன்பங்களை விடுத்து பரமாத்மாவிடம் திரும்புவானாகில், அவன் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க அவர் வழிவகுக்கிறார். இந்த உண்மையை வள்ளுவர் மேலே சொன்ன குறளில் விளக்கியுள்ளார். தனிப்பட்ட ஜீவாத்மா மற்றோர் உடலுக்கு மாற்றமடைவது, அவனுடைய எண்ணம், விருப்பம் மற்றும் செயல்களாலும், பரமாத்மாவின் கருணையாலும் சாத்தியமாகிறது. கீழ்க்காணும் ஸ்லோகம் அதனை உறுதி செய்கின்றது.

கர்மணா தைவ-நேத்ரேணஜந்துர் தேஹோபபத்தயே
ஸ்த்ரியா: ப்ரவிஷ்ட உதரம்பும்ஸோ-ரேத: கணாஷ்ரய:

“தன்னுடைய செயல்களின் விளைவினாலும் முழுமுதற் கடவுளின் பார்வையாலும், ஜீவனானவன் ஒரு தாயின் கருப்பையில் அடைக்கப்பட்டு உடம்பெடுக்கிறான். ஓர் ஆணின் விந்துவின் வாயிலாக ஜீவன் கருப்பையை அடைகிறான்.” (ஸ்ரீமத் பாகவதம் 3.31.1)

ஒரு நண்பன் மற்றொரு நண்பனின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதைப் போல பரமாத்மா அணு ஆத்மாவின் விருப்பங்களை பூர்த்தி செய்கிறார். முண்டக உபநிஷத், ஷ்வேதாஷ்வதர உபநிஷத் போன்ற வேத நூல்கள், ஆத்மாவையும் பரமாத்மாவையும் ஒரே மரத்தில் அமர்ந்திருக்கும் இரு தோழமைப் பறவைகளுக்கு ஒப்பிடுகின்றன. அப்பறவைகளில் ஒன்று (தனி அணு ஆத்மா) மரத்தின் கனிகளை உண்கிறது, மற்றதோ (பரமாத்மாவான கிருஷ்ணர்) தனது தோழனை வெறுமனே நோக்கிக் கொண்டிருக்கிறது. குணத்தில் ஒரே மாதிரியான இவ்விரண்டு பறவைகளில், ஒரு பறவை ஜடவுடல் எனும் மரத்தின் பழங்களால் கவரப்பட்டுள்ளது. மற்ற பறவையோ தனது நண்பனின் செயல்களை வெறுமனே நோக்கிக் கொண்டுள்ளது. கிருஷ்ணர் சாட்சிப் பறவை, ஜீவன் உண்ணும் பறவை. இருவரும் நண்பர்களே என்றபோதிலும் ஒருவர் எஜமானர், மற்றவர் சேவகன். இந்த உறவை அணு ஆத்மா மறந்து விடுவதே, மரம் விட்டு மரம் அல்லது உடல் விட்டு உடல் என்று அவன் தனது நிலையை மாற்றிக்கொள்வதற்கு காரணமாகிறது. ஜீவ பறவை ஜடவுடல் என்னும் மரத்தில் கடினமாகப் போராடிக் கொண்டுள்ளான். எனினும், அறிவுரைகளைப் பெறும் நோக்கத்துடன் தானே முன்வந்து கிருஷ்ணரிடம் சரணடைந்த அர்ஜுனனைப் போல, தொண்டனான ஜீவ பறவை தனக்கு அருகிலுள்ள பறவையை உன்னத ஆன்மீக குருவாக ஏற்கும்போது, உடனடியாக அவன் எல்லாக் கவலைகளிலிருந்தும் விடுபடுகிறான். முண்டக உபநிஷத் (3.1.2), ஷ்வேதாஷ்வதர உபநிஷத் (4.7) இரண்டுமே இதை உறுதிப்படுத்துகின்றன.

தனது நித்திய நண்பனான கிருஷ்ணரை நோக்கி முகம் திருப்பிய அர்ஜுனன் அவரிடமிருந்து பகவத் கீதையைப் புரிந்து கொண்டு ஆன்மீக பலம் பெற்று தர்ம யுத்தம் செய்ததால், போரில் வெற்றி மட்டுமல்லாது உயர்ந்த ஆன்மீக நிலையையும் பெற்றான். அதுபோல எந்தவொரு ஜீவாத்மாவும் கிருஷ்ணரின் பகவத் கீதையை அறிந்து, உன்னத நிலையை அடைந்து கவலைகளிலிருந்து விடுபட முடியும்.
       

               ஆத்மதத்துவம்


நாம் என்பது இந்த உடம்பல்ல, ஆத்மா என்பதை பகவத் கீதை இரண்டாம் அத்தியாயம் விளக்குகின்றது. ஆத்மா அழியாதது, உடல் விட்டு உடல் மாறக்கூடியது.

வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய
நவானி க்ருஹ்ணாதி நரோ
ததா ஷரீராணி விஹாய ஜீர்ணான்
யன்யானி ஸம்யாதி நவானி தேஹீ

"பழைய ஆடைகளைப் புறக்கணித்து புதிய ஆடைகளை ஒருவன் அணிவதைப் போன்றே, பழைய உபயோகமற்ற உடல்களை நீக்கி புதிய உடல்களை ஆத்மா ஏற்கின்றது.” (பகவத் கீதை 2.22)

பகவத் கீதையின் இதே கருத்து வள்ளுவரால் “நிலையாமை” என்னும் அதிகாரத்தில் உரைக்கப் படுகிறது. உடலுக்கும் உயிருக்கும் இடையிலான உறவினை முட்டை என்னும் கூட்டினை தனியே விட்டு விட்டு வேறிடத்திற்கு பறக்கும் பறவையுடன் வள்ளுவர் ஒப்பிடுகிறார்.

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு

(திருக்குறள் 338)

கீழ்காணும் குறளில், இந்த உயிரானது பல உடம்பினுள் மீண்டும்மீண்டும் புகும் என்பதைச் சுட்டிக் காட்டும் வள்ளுவர், துச்சமான அறியாமையாகிய மயக்கத்தைக் கொடுக்கின்ற இந்த உடம்பினுள் இருக்கும் உயிருக்கு நிலையான வீடு அமையவில்லையா என்று கேட்கின்றார்.

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு

(திருக்குறள் 340)

உடலைக் கண்டு வருத்தம் கூடாது

தான் ஓர் ஆத்மா என்பதை உணர்ந்து நிலையான இடம் தேடுதல் முக்கியம் என்றும், நிலையற்ற உடம்பு அழிவதைக் கண்டு வருந்தக்கூடாது என்றும் வள்ளுவர் கீழ்காணும் குறளில் கூறுகிறார்:

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்

(திருக்குறள் 627)

உடம்பு என்பது துன்பத்திற்கு இலக்காகக் கூடியது என்பதை உணர்ந்த அறிவிற் சிறந்த மேலோர் தன் உடலுக்கு ஏற்படும் துன்பத்தை ஒருபோதும் துன்பமாகக் கருத மாட்டார்கள் என்று கூறுகின்றார்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்தக் கருத்தை,

தேஹினோ யதா தேஹே
கௌமாரம் யௌவனம் ஜரா
ததா தேஹாந்தர ப்ராப்திர்
தீரஸ் தத்ர ந முஹ்யதி

“உடல் பெற்ற ஆத்மா சிறுவயதிலிருந்து இளமைக்கும் இளமையிலிருந்து முதுமைக்கும் மாறுவதைப் போலவே, மரணத்தின்போது வேறு உடலுக்கு மாறுகின்றது. தன்னை உணர்ந்த ஆத்மா (தீரன்) இதுபோன்ற மாற்றத்தால் திகைப்பதில்லை.” (பகவத் கீதை 2.13)

உடல் முழுவதும் உணர்வு பரவியிருப்பதை அனைவரும் அறிந்துகொள்ள முடியும். உடலின் ஒரு பகுதியிலோ உடல் முழுவதுமோ ஏற்படும் இன்ப துன்பங்களை அனைவரும் உணர்கின்றனர். இவ்வாறு பரவியுள்ள உணர்வு, ஒருவரின் சொந்த சரீரம் என்ற வரம்பிற்கு உட்பட்டது. ஓர் உடலின் இன்ப துன்பங்கள் மற்றவர்களுக்குத் தெரியாது. எனவே, ஒவ்வோர் உடலும் தனி ஆத்மாவை உடையதாகும். ஆத்மா உடலுள் உள்ளதால் தனிப்பட்ட உணர்வு உள்ளது.

ஆன்மீக அணுக்கள் எண்ணற்றவை. இந்த மிகச்சிறிய ஆன்மீகத் துகள் உணர்வுடையதாக இருப்பதால், உடல் முழுவதும் உணர்வு பரவியுள்ளது. சக்தி வாய்ந்த மருந்தின் ஆதிக்கம் உடல் முழுவதும் பரவுவதைப் போல, ஆன்மீக ஆத்மாவின் ஆதிக்கம் உடல் முழுவதும் பரவியுள்ளது. உடலில் பரவியுள்ள உணர்வே ஆத்மா இருப்பதற்கு ஆதாரம். உணர்வற்ற ஜடவுடல் பிணம் என்பதைப் பாமரனும் அறிவான். எந்தவித பௌதிக, வேதியியல் முறையினாலும் பிணத்தினுள் உணர்வை மீண்டும் புதுப்பிக்க முடியாது; எனவே, உணர்வென்பது ஜடப் பொருட்களின் கலவையினால் தோன்றுவதல்ல, ஆன்மீக ஆத்மாவினால் ஏற்படுகிறது. ஆன்மீக ஆத்மாவின் நிலையினை எல்லா வேதங்களும் தெரிவிக்கின்றன. மேலும் அறிவுள்ள எந்த மனிதனாலும் இதனை அனுபவபூர்வமாக அறிய முடியும்.

உடலின் இயக்க சக்திகள் யாவும் இதயத்திலிருந்து உருவாகின்றன என்று விஞ்ஞானிகள் அறிவர். ஆனால் அந்த சக்தியின் உற்பத்தி மூலம், ஆத்மாவே என்பதை இவ்விஞ்ஞானம் காண இயலாமல் இருக்கின்றது. ஆத்மாவின் இயல்பான இடம் உடம்பினுள் இருக்கும் இதயம் என்றும், அங்கே அந்த ஆத்மாவுடன் பரமாத்மாவாக இறைவனும் இருக்கிறார் என்றும் பகவத்கீதை, பாகவதம் போன்ற வேத நூல்கள் கூறுகின்றன

           நிலையற்ற பெளதீக உலகம்

 ஜடவுலகம், இதன் அனுபவங்கள் யாவும் தற்காலிகமானவை, நிலையற்றவை என்று வேத இலக்கியங்களும் திருக்குறளும் கூறுகின்றன. நிலையாமை அதிகாரத்தில் வள்ளுவர் கூறுகிறார்,

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு

 “நேற்று இருந்தவன் இன்றில்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமையை மட்டுமே பெருமையாக உடையது இவ்வுலகம்.” (திருக்குறள் 336) எனில், உயிர்வாழியான மனிதனுக்கு என்ன பெருமை?

இதே நிலையாமையை நம்மாழ்வார் தனது திருவாய்மொழியில் (1.2.2) மிகவும் சுருக்கமாகப் பின்வருமாறு கூறுகிறார்:

 மின்னின் நிலையில
என்னுமிடத்து, இறை – உன்னுமின் நீரே

 "உயிருடம்புகள் மின்னலைக் காட்டிலும் நிலையுடையவை அல்ல.”

 உலக வாழ்வின் நிலையாத் தன்மையை வேத சாஸ்திரங்கள் பல இடங்களில் உரைத்துள்ளன. பகவத் கீதையில் (8.15) ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்:

 மாம் உபேத்ய புனர்ஜன்மது:காலயம் அஷாஷ்வதம்
நாப்னுவந்தி மஹாத்மான:ஸம்ஸித்திம் பரமாம் கதா:

இங்கே கிருஷ்ணர் பௌதிக உலகத்தை து:காலயம், அதாவது துன்பங்கள் நிறைந்த இடம் என்றும், அஷாஷ்வதம், அதாவது தற்காலிகமானது என்றும் குறிப்பிடுகிறார். இவ்வுலகம் ஒவ்வோர் அடியிலும் அபாயங்கள் நிறைந்த துன்பகரமான இடம் என்பதை அறியாமையில் இருப்பவன் அறிவதில்லை. அதன் காரணத்தினாலேயே சிற்றறிவுடையோர், பலன்நோக்குச் செயல்களின் மூலம் சூழ்நிலையைச் சரி செய்ய முயற்சி செய்கின்றனர். முழுப் பிரபஞ்சத்திலும் உள்ள எவ்வித பௌதிக உடலும் துயரற்ற வாழ்வைத் தர இயலாது என்பதை அவர்கள் அறிவதில்லை.

 பௌதிக உலகத்தில் யாராலும் தீர்வு காண முடியாத நான்கு வகையான நிரந்தர பிரச்சனைகளும் மூன்று விதமான துன்பங்களும் உள்ளன. பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகியவை நான்கு நிரந்தர பிரச்சனைகளாகும்.

 மூன்று விதமான துன்பங்கள் என்னவென்றால்,

ஆத்யாத்மிக க்லேஷா – மனம் மற்றும் உடலால் விளையும் துன்பங்கள் (எ.கா) மன உளைச்சல்.
ஆதிதைவிக க்லேஷா – இயற்கையால் விளையும் துன்பங்கள் (எ.கா) சுனாமி.
ஆதிபௌதிக க்லேஷா – பிற உயிரினங்களால் விளையும் துன்பங்கள் (எ.கா) கொசுக்கடி.

விமானத்தில் பறக்கும்போது மனிதன் பல்வேறு திட்டங்களிலும் கற்பனைகளிலும் மிதக்கிறான். ஏதாவது சிறு இடையூறால் விமானம் நொறுங்கி விழுந்தால், அவனுடைய எல்லாத் திட்டங்களும் பாழ். தன்மனதாலும், பிற உயிர்களாலும், இயற்கையின் சீற்றத்தாலும் உயிர்வாழிகளுக்குத் துன்பம் கொடுப்பதுதான் இவ்வுலகு. இதனை உணர்ந்து மறுவுலகிற்குச் செல்ல நாம் முயற்சி செய்ய வேண்டும் என்பதே சாஸ்திரங்களும் பெரியோர்களும் நமக்கு வழங்கியுள்ள அறிவு.

          வாழ்வின்குறிக்கோள்


வாழ்வின் குறிக்கோள் யாது என்று மக்களிடம் வினவினால், புலன்களால் இந்த உலகப் பொருட்களை அனுபவித்தல் என்றோ இந்த ஜடவுலகில் உயர்ந்த நிலைக்கு வருதல் என்றோ தன்னைச் சார்ந்தவர்களுக்கு உதவி செய்தல் என்றோ பதில் வரும். இவையெல்லாம் தான் இந்த உடல் என்றும் தனக்கு சம்பந்தமானவற்றை தனது என்றும் நினைப்பதால் ஏற்படுபவை. வாழ்வின் நோக்கமின்றி வாழ்வதைச் சாடும் வகையில் வள்ளுவர், நிலையாமை என்ற அதிகாரத்தில்,

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல

“அறிவில்லாதவர்கள் ஒருபோதும் தாங்கள் எதற்காக வாழ்கிறோம் என்பதை ஆராய்வதே இல்லை, ஆயினும், அவர்களது இதர ஆய்வுகள் கோடிக்கணக்கில் உள்ளன.” (திருக்குறள் 337)

பகவத் கீதையில் (2.41) கிருஷ்ணர் இதே கருத்தைக் கூறுகிறார்:

வ்யவஸாயாத்மிகா புத்திர்ஏகேஹ குரு-நந்தன
பஹு-ஷாகா ஹ்யனந்தாஷ் சபுத்தயோ

“இவ்வழியில் உள்ளோர் தங்களது குறிக்கோளில் திடமான உறுதியுடன் இருப்பர். இவர்களது இலட்சியம் ஒன்றே. குரு வம்சத்தின் செல்வனே, உறுதியற்றவரது அறிவோ பல கிளைகளைக் கொண்டது.”

“இவ்வழி” என்று இங்கே குறிப்பிடப்படுவது கிருஷ்ண உணர்வு பாதை அல்லது புத்தி யோகம் என்று ஸ்ரீல பிரபுபாதர் தன் பொருளுரையில் விளக்குகிறார்.

கிருஷ்ண உணர்வின் உள்ளடக்கங்களாகிய இறைவனை அறிதல், அவரிடம் அன்பு செலுத்தப் பழகிக்கொள்ளுதல், அன்பைப் பெறுதல் இவையே வாழ்வின் குறிக்கோள் என்பது உறுதியாகிறது.

இந்த ஜடவுலகின் படைப்புகள் யாவும் நிலையற்றவை, அழியக்கூடியவை. தன் உடம்பே அழியக்கூடியது என்பதை மறந்து மனிதர்கள் அறிவியல் முன்னேற்றம் என்ற பெயரில் கோடிக்கணக்கான திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்துகின்றனர். பெரும்பாலானவை மனித குலத்திற்கே இடையூறு விளைவிப்பனவாக உள்ளன. இவற்றை அசுர வேலை என்று பகவத் கீதையின் 16ஆவது அத்தியாயத்தில் கிருஷ்ணர் கூறுகிறார். இந்த நிலையற்ற சிக்கலான வாழ்க்கை நமது வாழ்வின் குறிக்கோள் அல்ல.

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு

“துச்சமான அறியாமையின் மயக்கத்தைக் கொடுக்கின்ற இந்த உடம்பினுள் வாழும் உயிருக்கு நிலையாக குடிகொள்வதற்கு இன்னும் ஒரு வீடு அமையவில்லையோ.” (திருக்குறள் 340) இங்கே பௌதிக உலகில் துன்புறும் ஆத்மாக்களின் மீதான தனது வருத்தத்தை திருவள்ளுவர் தெரிவிக்கின்றார். பகவத் கீதையில் (15.7) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் இதுபோலவே வருத்தப்படுகின்றார்:

மமைவாம்ஷோ ஜீவ-லோகேஜீவ-பூத ஸனாதன:
மன:-ஷஷ்டானீந்த்ரியாணிப்ரக்ருதி-ஸ்தானி கர்ஷதி

“இந்தக் கட்டுண்ட உலகிலிருக்கும் ஜீவாத்மாக்கள் எல்லாரும் எனது நித்தியமான அம்சங்களாவர். கட்டுண்ட வாழ்வின் காரணத்தால், மனம் உட்பட ஆறு புலன்களுடன் இவர்கள் மிகவும் கடினமாக சிரமப்படுகின்றனர்.”

நம்மைக் கடைத்தேற்றுவதற்காக கிருஷ்ணர் கலி யுகத்தில் ஸ்ரீ கிருஷ்ண சைதன்யராக அவதாரம் செய்து போதனைகளைத் தொடர்ந்தார். பகவான் கிருஷ்ணர் இந்த மனித குலத்தின் மீது வைத்திருக்கும் கருணையை என்னவென்று கூறுவது? எல்லாவற்றிலும் உயர்ந்த இடமான முழுமுதற் கடவுளின் இருப்பிடத்தை அடைதல் வாழ்வின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதை வள்ளுவர் வரையறுத்துக் காட்டியுள்ளார். மேலும், திருவாய்மொழியில் (1.2.1) நம்மாழ்வார் கூறுகிறார்:

வீடுமின் முற்றவும் வீடுசெய்து உம்முயிர்
வீடுடை யானிடை வீடுசெய்ம்மினே

“எல்லாவற்றையும் விட்டு விடுங்கள், விட்டுவிட்டு உங்கள் உயிரை வீடு தரும் தலைவனிடம் அளித்து விடுங்கள்.” இறைவனிடம் சரணாகதி செய்து அன்புத் தொண்டாற்றுவதே எல்லா ஆழ்வார்களுடைய விருப்பமும் தவமும். எல்லா ஆழ்வார்களும் முழுமுதற் கடவுள் கண்ணனையும் அவனது திருஅவதாரங்களையும் கொண்டாடுவதை நாலாயிர திவ்ய பிரபந்தம் முழுவதும் காணலாம்.

தூய வைணவர்களின் விருப்பம் எங்கிருந்தாலும் முழுமுதற் கடவுளான கிருஷ்ணருக்கு அன்புத் தொண்டாற்றுவதே. அவர்கள் எந்த வகையான முக்தியையும் எதிர்பார்ப்பதில்லை. இதை ஆஞ்சநேயரின் வாழ்விலிருந்தும் காணலாம். ஸ்ரீமத் பாகவதமும் இத்தகைய தூய பக்தியே சிறந்ததென்று குறிப்பிடுகிறது.

பகவான் ஸ்ரீ சைதன்யர் தனது சிக்ஷாஷ்டகம் நான்காவது பாடலில், “எனது ஜன்ம ஜன்மங்களில் கிருஷ்ணா, உனது அன்புத் தொண்டே எனக்குத் தேவை,” என்று கூறுகிறார். மேலும், ஜீவேர ஸ்வரூப ஹய, க்ரிஷ்ணேர நித்ய-தாஸ, “ஜீவனுடைய உண்மையான தன்மை கிருஷ்ணருடைய நித்திய அன்புத் தொண்டனாக இருப்பதே,” என்பதே பகவான் ஸ்ரீ சைதன்யரின் வாக்கியம். இதை மகா வாக்கியம் என்று சொன்னால் மிகையாகாது. எல்லா மொழிகளிலும் உள்ள இலக்கியங்களை ஒருவன் கற்றுத் தேர்ந்தாலும், முழுமுதற் கடவுளான ஆதிபகவானுக்கு அன்புத் தொண்டாற்றவில்லை எனில், அவை எல்லாம் வீண் என்பதை இரண்டாவது குறளில் வள்ளுவர் காட்டுகின்றார்.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

எல்லாம் அறிந்தவரான முழுமுதற் கடவுளின் நல்ல பாதங்களைத் தொழுதல் ஒன்பது வகையான பக்தித் தொண்டில் ஒன்றாகும். தன்னை உணர்வதும் இறைவனை உணர்வதும் அந்த உணர்வில் இறைவனுக்கு அன்புத் தொண்டாற்றுவதும் முக்கிய போதனைகளாகும். இதனை வாழ்வின் குறிக்கோளாக ஒவ்வொரு ஜீவாத்மாவும் ஏற்றுக் கொண்டால், கவலை என்பது இல்லை.

                           சுபம்

Comments

Popular posts from this blog

புராண பேத தாத்பர்ய விளக்கம்

கிருஷ்ணலீலா ஆபாச தர்ப்பணம்